ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன் pt web
இந்தியா

“மத்திய பட்ஜெட்டில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் வாக்குறுதிகள்” - ப.சிதம்பரம் கருத்து

Angeshwar G

18வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவி ஏற்றது. இதில் 2019ம் ஆண்டு முதல், நாட்டின் முழு நேர நிதியமைச்சராக இருந்து வரும் நிர்மலா சீதாராமனே மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சூழலில், தற்போது தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்யும், முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ், “2021 ஆம் ஆண்டு எடுத்திருக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுப்பதற்கான நிதியை வெளியிடுவதற்கான தரவு மற்றும் புள்ளிவிவரங்கள் ஏதும் நிதியமைச்சரின் அறிவிப்பில் இல்லாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் இதுதொடர்பாக கூறுகையில், “மத்திய பட்ஜெட்டால் மக்கள் மகிழ்ச்சி அடைவதற்கான எந்தக் காரணமும் இல்லை; பல முக்கியமான விஷயங்கள் குறித்த பெயர்கள் கூட இடம் பெறவில்லை” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இதுதொடர்பாக கூறுகையில், “தேர்தல் முடிவுகளுக்குப் பின் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் படித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 11ஆம் பக்கத்தில் உள்ள அம்சம் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. 30ஆம் பக்கத்தில் உள்ள வேலைவாய்ப்புக்கான ஊக்கத்தொகையும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “நம்பிக்கையற்ற மூட்டை இந்த பட்ஜெட்” என விமர்சனம் செய்துள்ளார்.