இந்தியா

நாடாளுமன்ற வளாகம் முன்பு சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற வளாகம் முன்பு சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்

webteam

நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலையின் முன்பு சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா மற்றும் கோவாவில் பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கர்நாடகா அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 14 எம் எல் ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று அமைச்சரான நாகராஜும், ஜிக்மள்ளாபூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சுதாகரும், சட்டப்பேரவைக்கு வந்து தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம் எல் ஏக்கள், மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 3 எம் எல் ஏக்கள் என ராஜினாமா கடிதம் அளித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தவிர இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் ஏற்கனவே அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். 

இதேபோல் கோவாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கோவாவில் பாஜகவின் பலம் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் மன மாற்றத்திற்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலையின் முன்பு சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மற்றும் கோவாவில் பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.