இந்தியா

'ஹிட்லருக்கு எப்படி மரணம் நேர்ந்ததோ அப்படித்தான் மோடிக்கும்' - காங். தலைவர் சர்ச்சை பேச்சு

'ஹிட்லருக்கு எப்படி மரணம் நேர்ந்ததோ அப்படித்தான் மோடிக்கும்' - காங். தலைவர் சர்ச்சை பேச்சு

JustinDurai

ஹிட்லருக்கு எப்படி மரணம் நேர்ந்ததோ அப்படித்தான் பிரதமர் மோடிக்கு நேரும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் சுபோத்காந்த் சஹாய் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சஹாய், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். ''ஹிட்லரைப் போல நடந்து கொள்பவர்கள் அவரைப்போல் தான் இறப்பார்கள். பிரதமர் மோடியும் ஹிட்லரைப் போலதான் இறப்பார்" என்று சுபோத் காந்த் சஹாய் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்தக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறுகையில், ``காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரதமரை அவமதித்திருக்கிறார். இது போன்ற வார்த்தைகளை காங்கிரஸ் பயன்படுத்துவது முதல்முறை அல்ல. 80க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் உள்ளன. நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று கூறிய இம்ரான் மசூத்துக்கு ஆதரவாக ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கேவலமான வார்த்தைப் பிரயோகம் செய்து வருகின்றனர்.

அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடியை கொலை வியாபாரி என்று விமர்சனம் செய்தார். இந்த வார்த்தையால் குஜராத் மக்கள் மிகவும் காயப்பட்டனர். அதனால்தான் பிரதமர் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்றார். மக்கள் மோடிமீது அன்பு வைத்திருப்பதால்தான் தொடர்ச்சியாக அவரை வெற்றி பெறச்செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் விரக்தி அடைந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாம்: பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 17 பேர் பலி!