தெலுங்கானாவில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி, போலீஸ் ஒருவரின் சட்டயை பிடித்து வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர். கடந்த 3 நாள்களில் ராகுலிடம் அமலாக்கத் துறை சுமாா் 30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. இதனிடையே ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள், தொண்டர்கள் கடந்த 3 நாட்களாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் நாடு முழுவதும் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை நடத்தவும் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் திரளாகக் கூடி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். இச்சூழலில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நட்ந்த ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தின்போது போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி, போலீஸ் ஒருவரது சட்டையைப் பிடித்து தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு குவிந்த போலீசார், ரேணுகா சவுத்ரியின் பிடியில் இருந்து அந்த காவலரை விடுவித்தனர். அத்துடன் ரேணுகா சவுத்ரியை இழுத்துக் கொண்டு போலீஸ் வேனில் ஏற்றினர். தம்மிடம் அந்த போலீஸ்காரர் தவறாக நடந்து கொண்ட காரணத்தாலேயே அவரது சட்டையைப் பிடித்தேன் என விளக்கம் தந்துள்ளார் ரேணுகா சவுத்ரி. சமூக வலைதளங்களில் ரேணுகா சவுத்ரி, காவலரின் சட்டையை பிடித்து வாக்குவாதம் செய்யும் வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கலாம்: காங்கிரஸ் எம்பிக்கள் மீது காவல்துறை தாக்குதல் - சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார்