உங்கள் பிரதமர் வேட்பாளரை சொல்வதில் ஏன் சிக்கல் என்ற கேள்விக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி பதிலளித்துள்ளார்.
பாஜக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் அனைத்துக் கட்சியினர் ஒன்றுகூடிய நிகழ்வுகள், ஒரு மெகா கூட்டணிக்கு காங்கிரஸ் தயாராகிறது என்ற தோற்றத்தை உருவாக்கின. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், கூட்டணியை இறுதிசெய்வதில் காங்கிரஸ் தடுமாறி நிற்கிறது.
இதனிடையே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச்சிலையை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சோனியா காந்தி கடந்த டிசம்பர் மாதம் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக தெரிவித்தார்.
மேலும், “ராகுல் காந்தியே வருக, நல்லாட்சி தருக” எனவும் கூறினார். இந்தக் கருத்து தேசிய அரசியல் தளத்தில் பலதரப்பட்ட விவாதங்களுக்கு வழிவகுத்தது. கூட்டணி வைப்பதாக கூறிய தலைவர்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று தேர்தல் முடிந்தவுடன் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என தட்டிக் கழித்தனர்.
இதுப்போன்ற விவாதங்களுக்கு பதிலளித்த ஸ்டாலின் ‘ராகுலை ஸ்டாலின் முன்மொழிந்தது தவறு’ என்று யாரும் சொல்லவில்லை என தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்பதை தெளிவு படுத்த முன்வரவில்லை.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தியிடம் உங்கள் பிரதமர் வேட்பாளரை சொல்வதில் ஏன் சிக்கல் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், பிரதமர் பெயரை மக்களிடம் திணிப்பது அடாவடியாக காங்கிரஸ் கருதுவதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.
இந்த கருத்தின் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மையை மக்கள் அளிக்க வேண்டும் என்பதை அவர் மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தால் தான் பிரதமர் ஆவேன் என்று கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போதும், அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.