தொகுதியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் விதமாக தேர்தல் பரப்புரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜெய்ப்பூரில் தொடங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களுடன் விமான நிலையம் முதல் ராம்லீலா மைதானம் வரை சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்ற ராகுல் காந்தி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
வரும் டிசம்பர் மாதம் இறுதியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக தொகுதியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படாது என ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசிய பின்னரே தேர்தல் சீட்டு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.