இந்தியா

2024 தேர்தலையொட்டி 8 பேர்கொண்ட அரசியல் விவகாரக்குழு - காங்கிரஸ் தலைமை உத்தரவு

2024 தேர்தலையொட்டி 8 பேர்கொண்ட அரசியல் விவகாரக்குழு - காங்கிரஸ் தலைமை உத்தரவு

Sinekadhara

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 8 பேர் கொண்ட அரசியல் விவகாரக்குழுவை அமைத்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வியூகம் வகுப்பாளர் கனுகொலுக்கு செயற்பாட்டு குழுவில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தற்போது தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் தலைவர் சோனியா காந்தி பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வரும்நிலையில் அண்மையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிந்தனை அமர்வு என்ற மூன்று நாள் கூட்டத்தை காங்கிரஸ் நடத்தியது. இதில் பொதுத்தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனடிப்படையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அரசியல் விவகாரங்கள் குழு உள்ளிட்ட மூன்று குழுக்களை காங்கிரஸ் தலைமை இன்று அமைத்து உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான அரசியல் விவகாரங்கள் குழுவில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர். அதைப்போன்று 2024-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்குழுவில் (Task Force) முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேர்தல் வியூகம் வகுப்பாளர் சுனில் கனுகொலு உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் காந்தி ஜெயந்தி தினம்முதல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தொடங்க உள்ள பாரத் ஜோடோ யாத்ரா திட்டமிடலுக்கான குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சச்சின் பைலட், சசிதரூர் உள்ளிட்ட 9 பேர் இடம் பெற்றுள்ளனர். இதனையடுத்து விரைவில் குழுக்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.