இந்தியா

கர்நாடகாவை தொடர்ந்து உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு

கர்நாடகாவை தொடர்ந்து உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி கலைப்பு

webteam

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாவட்ட கமிட்டிக்களும் கலைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை கூட பெறமுடியாத நிலைக்கு அக்கட்சி தள்ளுப்பட்டது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானியிடம் தோல்வியடைந்தார். இதனால் காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தி அடைந்தது. ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தார். பின்னர் கட்சியினரின் வற்புறுத்தலால், பதிவியில் தொடர்கிறார்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பொறுப்பாளர்களான பிரியங்கா காந்தி மற்றும் ஜோதிராதித்யா ஆகியோரை தவிர, அனைத்து மாவட்ட பொறுப்புகளும் கலைக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதன்பின்னர் உத்தரப்பிரதேசத்தின் தோல்வி குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் இரண்டு பொறுப்பாளர்களிடம் குறைகளை கூறுவார்கள். அதன் அடிப்படையில் கட்சிப் பணியில் சரியாக செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கர்நாடகாவில் தலைவர் மற்றும் செயல்தலைவர் இருவரை தவிர்த்து, காங்கிரஸ் கமிட்டி முற்றிலும் கலைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை காங்கிரஸின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது உத்தரப்பிரதேசம் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மேலும் சில மாநிலங்கள் இணையும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.