மருத்துவர் ஷாகித் ஜமீல் ராஜினாமா சர்ச்சையில், தொழில்முறை நிபுணர்களுக்கு மத்திய அரசில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
தேசிய மரபணு வரிசைப்படுத்தல் விஞ்ஞானிகள் குழுவில் இருந்து மருத்துவர் ஷாகித் ஜமீல் ராஜினாமா செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் விமர்சனம் வெளியாகியுள்ளது. இந்தியாவின் சிறந்த வைரலாஜி மருத்துவர்களில் ஒருவரான ஷாகித் ஜமீலின் விலகல் கவலைக்குரியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் அலட்சியமான செயல்பாடுகளால் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த நாடு அவதிப்படப்போகிறதோ என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். ஷாகித் ஜமீல் தாமாக முன்வந்து விலகினாரா அல்லது வெளியேற நிர்பந்தப்படுத்தப்பட்டாரா என்று மற்றொரு காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஒவைசியும் ஷாகித் ஜமீலின் விலகல் குறித்து விமர்சித்துள்ளார்.
தரவுகளின் அடிப்படையில் கொள்கைகளை வகுப்பதில் சிக்கல் இருக்கிறது என்றும், இதனால் இந்தியாவில் கொரோனா கைமீறிச் சென்றுவிட்டது என்றும் ஷாகித் ஜமீல் நியூயார்க் டைம்ஸ் இதழில் எழுதியிருந்தார். இந்நிலையில் அவரது ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.