ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே லேசான மோதல் ஏற்பட்டது.
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு, மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வந்தனர். இந்தத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. மறுமுனையில் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்சா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆகியவை கூட்டணியாக களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 46.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலாமு கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கே.என்.திரிபாதி மற்றும் பாஜக வேட்பாளர் அலோக் சௌராசியா ஆகிய இருவரின் ஆதரவாளர்களிடை மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் திரிபாதியை பாஜகவினர் தடுத்து நிறுத்த முயன்றனர். அந்த நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கே.என்.திரிபாதி தனது கையில் துப்பாக்கியுடன் வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பலாமு பகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி ஷான்தனு அகராஹரி, “கோஷியாரா வாக்குச் சாவடியில் ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடை சிறிய தள்ளு முள்ளு ஏற்பட்டது. அத்துடன் அந்த வாக்குச் சாவடிக்குள் காங்கிரஸ் வேட்பாளர் கே.என்.திரிபாதி ஆயுதங்களுடன் நுழைய முற்பட்டார். அவரிடம் இருந்த ஆயதங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: தேர்தலுக்கு முந்தைய ஜார்க்கண்ட் மாநில கருத்துக் கணிப்புகள் - பாஜகவின் நிலை என்ன ?