இந்தியா

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த நேஷனல் ஹெரால்டு விவகாரம்.. இருஅவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த நேஷனல் ஹெரால்டு விவகாரம்.. இருஅவைகளும் ஒத்திவைப்பு

webteam

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின.

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமைந்துள்ள "எங் இந்தியா" நிறுவனத்தின் அலுவலகத்தை நேற்று அமலாக்கத்துறை சீல் வைத்ததால், அமலாக்கத்துறை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி மீண்டும் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை நேஷனல் கட்டிடத்துக்கு அழைத்ததால், அரசியல் ரீதியாக பதட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது.

மக்களவை உறுப்பினர்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம் நடைபெற்ற நிலையில், இன்று பல்வேறு மசோதாக்களை விவாதத்துக்கு கொண்டு வர மத்திய அரசு முனைந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் காலையிலிருந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர் முழக்கங்களை எழுப்பினர். முதலில் நண்பகல் 12 மணி வரையும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்ட அவைகள், முழக்கங்கள் தொடர்ந்ததால் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

என்னை அமலாக்கத்துறை இன்று நண்பகல் 12.30 மணிக்கு அழைத்துள்ளது என்று தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடவடிக்கைகளில் நான் எப்படி கலந்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சி தலைவர்களை அச்சுறுத்தும் வகையில் அமலாக்கத்துறை செயல்படுகிறது என்றும் ஜனநாயக படுகொலை நடைபெறுகிறது எனவும் கார்கே குற்றம் சாட்டினார்.

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்துக்கு சென்றார். அங்கே அமலாக்கத்துறை அதிகாரிகள் "யங் இந்தியா" அலுவலக சீல் வைப்பு மற்றும் சோதனை குறித்து அவரை சந்தித்தனர். அமலாக்கத்துறை கார்கேவை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினார்கள். அவைத் தலைவர்கள் கேள்வியின் நேரம் மற்றும் மசோதாக்கள் மீதான விவாதங்கள் ஆகியவற்றை நடத்த முடியாத வகையில் தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் மேற்குவங்க அரசிலிருந்து நீக்கப்பட்டுள்ள பார்த்தா சட்டர்ஜி, அவருக்கு நெருக்கமானவர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அதேபோல் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருப்பதை சிவசேனா கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு வரும் நாட்களில் தொடரும் என கருதப்படுகிறது.

- புது டெல்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்