மக்களவை தேர்தல் 2024 | காங்கிரஸ் தேர்தல் அறிக்கை pt web
இந்தியா

மக்களவையில் மீண்டும் எதிர்க்கட்சியாக காங்கிரஸ்.. எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரங்கள் என்னென்ன?

பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், 99 இடங்களில் வென்ற காங்கிரஸ், மக்களவையில் மீண்டும் எதிர்க்கட்சியாக அமர இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவருக்கான அதிகாரங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

PT WEB

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கட்சிக்கு அடுத்து அதிக இடங்களில் வென்ற கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். 2014, 2019-ல் 10 சதவீதத்திற்கு குறைவான இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸை எதிர்க்கட்சியாக மக்களவை சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை.

தற்போது 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி இருக்கையில் அமர இருக்கிறது. அக்கட்சியைச் சேர்ந்தவரே எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பங்கு இன்றியமையாதது.

மக்களவை தேர்தல் 2024

நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றம் சரியாக இயங்குவதை உறுதி செய்யும் பெரும் பொறுப்பை உடையவரே எதிர்க்கட்சி தலைவர். அரசு தவறான திட்டங்களை அல்லது கொள்கைகளை வகுக்கும்போது மக்கள் பக்கம் நின்று குரல் கொடுப்பது எதிர்க்கட்சி தலைவரின் கடமை.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்பவர் கேபினட் அமைச்சருக்கு நிகரான அந்தஸ்தை உடையவர். நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் முக்கிய குழுக்களின் உறுப்பினராகவும் எதிர்க்கட்சி தலைவர் இருப்பார். குறிப்பாக, பொதுக் கணக்கு, பொதுத் துறை நிறுவனங்கள், பல்வேறு நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் உறுப்பினராக எதிர்க்கட்சி தலைவர் செயல்படுவார்.

சிபிஐ, மத்திய தகவல் ஆணையம், மனித உரிமை ஆணையம், லோக்பால் உள்ளிட்டவற்றின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவிலும் எதிர்க்கட்சி தலைவர் அங்கம் வகிப்பார். எதிர்க்கட்சி தலைவருக்கென தனி வீடு ஒதுக்கப்படும். அதற்கு வாடகையோ, பராமரிப்புத் தொகையோ செலுத்த வேண்டியதில்லை.