இந்தியா

“ம.பியில் ஆட்சியை கவிழ்க்க பணத்தை வைத்து பாஜக குதிரை பேரம்”- காங்., குற்றச்சாட்டு

“ம.பியில் ஆட்சியை கவிழ்க்க பணத்தை வைத்து பாஜக குதிரை பேரம்”- காங்., குற்றச்சாட்டு

webteam

மத்தியப் பிரதேசத்தில் மாநில ஆட்சியை கவிழ்ப்பதற்காக 8 எம்.எல்.ஏக்களை பாஜக சிறைபிடித்து வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 231 இடங்களை கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. 107 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.

இந்நிலையில், மாநில அரசை கவிழ்க்கும் முயற்சியிலும் காங்கிரஸின் எம்.எல்.ஏக்களை கடத்தும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, மாநில நிதியமைச்சர் தருண் பானோத் கூறுகையில், ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஒரு ஹோட்டலில் 4 சுயேட்சை எம்.எல்.ஏக்களும், 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் அளித்த பேட்டியில் “கமல்நாத் அரசை கவிழ்க்கும் நோக்கத்தில் எம்.எல்.ஏக்களுக்கு மிகப்பெரிய அளவில் பணம் கொடுத்து அவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. எம்.எல்.ஏக்களை பிணைக் கைதிகளாக வைத்திருப்பது எங்களுக்குத் தெரிந்ததும், காங்கிரஸ் கட்சியின் ஜிது பட்வாரியும் ஜெயவர்தன் சிங்கும் அங்கு சென்றனர். எங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் திரும்பி வரத் தயாராக இருந்தனர். பிசாஹுலால் சிங் மற்றும் ரமாபாய் ஆகியோரை எங்களால் தொடர்பு கொள்ள முடிந்தது. பாஜக தடுத்து நிறுத்த முயன்றபோதும் ரமாபாய் எங்களுடன் திரும்பி வந்தார்” எனத் தெரிவித்தார்.

மேலும், “பாஜகவின் ராம்பால் சிங், நரோட்டம் மிஸ்ரா, அரவிந்த் பதரியா, சஞ்சய் பதக் ஆகியோர் அவர்களுக்கு பணம் கொடுக்கப் போகிறார்கள். ஒரு சோதனை நடந்தியிருந்தால், அவர்கள் பிடிபட்டிருப்பார்கள். 10-11 எம்.எல்.ஏக்கள் அவர்களிடம் இருந்ததாக நினைக்கிறோம். இப்போது 4 பேர் மட்டுமே அவர்களுடன் இருக்கிறார்கள். அவர்களும் எங்களிடம் திரும்பி வருவார்கள்.” எனத் தெரிவித்தார்.

சில பாஜக தலைவர்கள் மாநில அரசை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூ. 25-35 கோடி வரை குதிரை பேரம் பேசுவதாக கடந்த திங்கள் ழமை மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியிருந்தார். மத்திய பிரதேசத்தில் வரும் 26-ஆம் தேதி 3 எம்பி பதவிகளுக்கான மாநிலங்களவை தேர்தல் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.