குஜராத் தேர்தலின் போது பாஜகவுக்கு எதிரான குரல்கள் எழுப்புவதை தவிர்க்கவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தாமதப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள், ரஃபேல் விமான சர்ச்சை, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்டவை குறித்து தாங்கள் குரல் எழுப்ப திட்டமிட்டிருந்ததாக மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். மத்திய அரசின் செயல்கள் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட விஷயத்தை பற்றி மட்டும் மறந்து விடும் செலக்டிவ் அம்னீஷியா வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் அனந்த குமார் தெரிவித்துள்ளார். 2012, 2013ம் ஆண்டுகளில் காங்கிரஸ் ஆண்ட போது கூட மாநிலத் தேர்தல்களை ஒட்டி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டதாக அனந்த்குமார் நினைவு கூர்ந்தார். இந்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தள்ளிப்போவது குறித்து மீண்டும் காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது.