இந்தியா வரும் அமெரிக்க அதிபரிடம் எச்1பி விசா, வர்த்தக சலுகையை மீண்டும் வழங்குவது உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பேசுவாரா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் முதன்முறையாக 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை தர இருக்கின்றனர். அகமதாபாத் விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவர்களுக்கு விமான நிலையத்தில் இருந்து வல்லபாய் கிரிக்கெட் மைதானம் வரை பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.
இதற்காக அகமதாபாத் நகரம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ட்ரம்ப் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து இந்தியாவிற்கு தனி விமானத்தில் புறப்பட்டுள்ளார். வரலாற்று மிக்க இந்தச் சந்திப்பில் முக்கிய பேச்சுவார்த்தைகள் பேசப்படும் எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா வரும் அமெரிக்க அதிபரிடம் எச்1பி விசா, வர்த்தக சலுகையை மீண்டும் வழங்குவது உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பேசுவாரா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, அமெரிக்க நலனுக்கே முன்னுரிமை என டிரம்ப் கூறும் போது இந்திய நலனுக்கே முன்னுரிமை என்ற தன் கொள்கையில் மோடி மவுனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்திய நலன் காக்கும் விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து ட்ரம்ப்பிடம் மோடி பேச வேண்டும் என்றும் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார்.