இந்தியா

எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்க தடையில்லை

எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்க தடையில்லை

webteam

கர்நாடகாவில் எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு 2 மணி முதல், விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. 

காங்கிரஸ்-மஜத சார்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, பல்வேறு வாதங்களை முன் வைத்தார். ஆளுநரின் அதிகாரம் குறித்தும், அதில் நீதிமன்றம் தலையிடுவதும் குறித்தும் அதிக வாதங்களை சிங்வி முன் வைத்தார். அதேபோல், டெல்லி, கோவா உட்பட 7 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிதான் ஆட்சியை அமைத்தது என்பதை குறிப்பிட்டும் வாதிட்டார். இறுதியில், இரண்டு நாட்கள் பதவியேற்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்தார். 

அபிஷேக் சிங்விக்கு பிறகு மத்திய அரசு தரப்பில் கே.கே.வேணுகோபால், கர்நாடக பாஜக தரப்பில் முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். “கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் முடிவுக்கு எதிரான காங்கிரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆளுநரை அவரது பணியை செய்யவிடுங்கள், நீதிமன்றம் அவருடைய வேலைகளில் தலையிட வேண்டாம். குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ நீதிமன்றங்களில் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆளுநர் கடமையாற்றுவதை தடுத்துவிட்டால், எந்த சட்டமும் இயற்றப்படாது” என்று முகுல் ரோஹத்கி வாதிட்டார். 

வாதத்தின் இடையே, 7 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், முகுல் ரோஹத்கி என தெரிவித்தனர். சுமார் 4.30 மணியளவில் எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி சிக்ரி கூறினார். நீதிபதி ஏ.கே.சிக்ரி வாய்மொழியாக கூறுகையில், “எடியூரப்பாவின் பதவியேற்புக்கு தடைவிதிக்க முடியாது. அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அளித்து முழுமையாக விசாரிக்கப்படும்” என்று தெரிவித்தார். இருப்பினும், நீதிபதிகள் இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.