போலீஸில் புகார் கொடுத்துள்ள கேரள கன்னியாஸ்திரி லூசி, புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திருச்சபை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரளாவை சேர்ந்த முன்னாள் பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல், கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, பிஷப் ஃபிராங்கோவை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகள் பலர் போராட்டம் நடத்தினர். இதில், கன்னியாஸ்திரி லூசி களப்புராவும் (53) பங்கேற்றார். இதன் காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருச்சபை அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் விளக்கம் அளித்திருந்தார். அது திருப்திகரமாக இல்லை என்று கூறி, திருச்சபையில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த நீக்கத்துக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான, வாடிகன் திருச்சபையில் முறையிட்டுள்ளார் லூசி.
இந்நிலையில், தான் தங்கியிருந்த கான்வென்டில் அவரது அறையின் கதவை சிலர் வெளிப்புறமாக பூட்டினர். அதிர்ச்சி அடைந்த லூசி, தான் சிறை வைக்கப்பட்டிருப்பதாக வெள்ளமுண்டா போலீசுக்கு புகார் செய்தார். போலீசார் பூட்டை உடைத்து கன்னியாஸ்திரியை மீட்டனர். இதுதொடர்பாக அவர் தங்கியிருந்த கான்வென்ட் சுப்பிரீயர் மீது கன்னியாஸ்திரி லூசி புகார் கொடுத்ததை அடுத்து, வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுப்பிரீயர் மீது கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் இதற்காக கன்னியாஸ்திரி லூசி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் திருச்சபை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, தன்னை சிலர் தாக்கக் கூடும் என்பதால் கன்னியாஸ்திரி லூசி, போலீஸ் பாதுகாப்புக் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.