மக்களவையில் பாரதிய ஜனதா பெண் எம்பிக்களிடம் காங்கிரஸ் எம்பிக்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பியதால், தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் மக்களவையில் டெல்லி வன்முறை தொடர்பாக அமளி ஏற்பட்டபோது காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தள்ளி விட்டதாக புகார் எழுந்தது.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிருதி இரானி, பாரதிய ஜனதா பெண் எம்பிக்களிடம் காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் அநாகரிகமாக நடந்ததாகவும், கடந்த இரண்டு, மூன்று கூட்டத் தொடர்களில் குண்டர்கள் போல நடந்து கொண்டு, அவை நடவடிக்கைகளை சீர்குலைப்பதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, தன்னை பாரதிய ஜனதா பெண் எம்பி தாக்கியதாக காங்கிரசைச் சேர்ந்த ரம்யா ஹரிதாஸ் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில், அமைச்சர் ஸ்மிருதி இரானியின் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.