மகாராஷ்டிரா INDIA கூட்டணித் தலைவர்கள் pt web
இந்தியா

மகாராஷ்டிரா: தொகுதிப்பங்கீட்டில் இழுபறி.. பாஜக கூட்டணியில் குழப்பம்.. ஸ்டெடியாக எதிர்க்கட்சியினர்..

மகாராஷ்டிராவில் இரு பெரும் கூட்டணிகள் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் அவற்றில் இடம் பெற்றுள்ள கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வரிசையாக வெளியிட்டு வருகின்றன.

PT WEB

ஆளும் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் 38 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்டப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சித் தலைவரும் துணை முதலமைச்சருமான அஜித் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார். அறிவிக்கப்பட்ட 38 பேரில் 26 பேர் தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர்.

இதற்கிடையே 45 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்டப் பட்டியலை சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவு வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கோப்ரி பஞ்சபகாடி தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போதுள்ள அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பாலானோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக ஏற்கனவே 99 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாஜக 150 முதல் 155 இடங்களிலும் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவு 78 முதல் 80 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவு 52 முதல் 54 இடங்களிலும் போட்டியிட முடிவாகியுள்ளதாக தெரிகிறது.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவில் மகா விகாஷ் அகாடி கூட்டணியில் உள்ள கட்சிகள் மொத்தம் உள்ள 288 தொகுதிகள் தலா 85 இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 18 இடங்களை கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு வழங்கவும் மகா விகாஷ் அகாடி திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 65 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே மும்பை ஓர்லி (WORLI) தொகுதியில் போட்டியிடுகிறார்.