இந்தியா

இந்திய தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர் !

இந்திய தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர் !

webteam

பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப் படை தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் பிபிசி உருது தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

புல்வாமாவில் பயங்கரவாதிகள் கோரத் தாக்குதல் நடத்திய 12 நாட்களுக்குப் பிறகு, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் கட்டுப்பாட்டு அறைகள் தகர்த்தப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 3.30 மணிக்கு சீறிப்பறந்த இந்தியாவின்‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பாலகோட் பகுதியில் அதிகாலை 3.45 மணி முதல் 3.53 மணிவரை தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதல் சுமார் 8 நிமிடம் நீடித்தது. இதேபோல் முஷாபரா பாத் பகுதியில் அதிகாலை 3.48 மணி முதல் 3.55 மணி வரை சுமார் 7 நிமிடம் தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து சகோட்டி பகுதியில் அதிகாலை 3.58 மணி முதல் 4.04 மணி வரை சுமார் 6 நிமிடம் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. சுமார் 21 நிமிடம் நடந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முகாதீன் தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது. இதில் முக்கியமாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டு அறை தகர்க்கப்பட்டது.

இந்நிலையில் பாலகோட் பகுதியில் வசித்துவந்தவர்களில் ஒருவரான ஹீத் விகார் என்பவர் இந்திய விமானப்படையின் தாக்குதல் பற்றி பிபிசி உருது தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் “அதிகாலை 3.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது. அதன்பிறகு இரண்டு விநாடிகளில் சத்தம் கேட்டது. அதற்குபிறகு தொடர்ந்து பயங்கர சத்தம் கேட்டது. இந்த கிராமத்திலிருந்த மக்கள் அனைவரும் ஓடிவந்து பார்த்தனர். கண் இமைக்கும் நேரத்தில் விமானங்கள் பறந்து சென்றுவிட்டன. இந்தத் தாக்குதல் நடந்து நான்கு நிமிடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் விமானங்கள் ஆகாயத்தில் பறந்தன. ஆனால் இந்திய விமானங்கள் அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் பறந்து சென்றுவிட்டதால். அதனால் பாகிஸ்தான் விமானங்கள் திரும்பி சென்றுவிட்டன” எனக் கூறியிருந்தார்.