சமோசா கோப்புப்படம்
இந்தியா

புனே | சமோசாவில் கிடந்த ஆணுறை, குட்கா, கற்கள்... வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!

புனேவில் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட சமோசாவில் ஆணுறைகள், குட்கா, கற்கள் போன்றவை கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

புனே பிம்பாரி சின்ச்வாட்டில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சமோசாவில் ஆணுறை, குட்கா, கற்கள் போன்றவை இருந்துள்ளன.

இதைகண்டு அதிர்ந்த ஊழியர்கள், ‘ஃபிரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் என்பவர்கள்தான் இதற்கு காரணமாக இருக்கக்கூடும்’ என காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகியுள்ளன.

விசாரணையில் தெரியவந்தது என்ன?

ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு சமோசா வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்தவர்கள் மனோகர் எண்டர்பிரைசஸ். இவர்களுக்கும் SRI என்ற மற்றொரு சமையல் ஆர்டர் எடுக்கும் நிறுவனத்திற்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்தள்ளது. இதனால் மனோகர் நிறுவனத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் SRI நிறுவனத்தினர் செய்த சதிதான் இது என்பது தெரியவந்துள்ளது.

மனோகர் - SRI : இரு நிறுவனத்துக்கும் என்ன முன்விரோதம்?

முன்னதாக இந்த ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு சிற்றுண்டி வழங்கும் ஆர்டர் SRI எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின்வசம் இருந்துள்ளது. அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள்தான் ரஹீம் ஷேக், அசார் ஷேக், மசார் ஷேக் ஆகியோர். இவர்கள் வழங்கிய சிற்றுண்டியில் ஒருமுறை பேண்டேஜ் கிடந்ததால் இவர்களின் ஒப்பந்தம் ரத்தாகியுள்ளது. பின், மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கைமாறியுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரஹீம் ஷேக், அசார் ஷேக் மற்றும் மசார் ஷேக் ஆகியோர், ஃபிரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் என்ற தங்களின் முன்னாள் ஊழியர்களை அழைத்து, மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சமோசாவில் ஆணுறை, குட்கா, கற்கள் ஆகியவற்றை கலக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

தற்போது உண்மை அம்பலமான நிலையில், இக்குற்றத்தில் தொடர்புடைய ரஹீம் ஷேக், அசார் ஷேக், மசார் ஷேக், ஃபிரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது ஐபிசி பிரிவு 328, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.