இந்தியா

மாநில ஆளுநராக என்ன மாதிரியான தகுதிகள் தேவை? 

மாநில ஆளுநராக என்ன மாதிரியான தகுதிகள் தேவை? 

webteam

ஒருவரை ஆளுநராக நியமிக்க என்ன மாதிரியான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

தெலங்கானா,கேரளா,மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆளுநராக என்ன தகுதிகள் வேண்டும் எனப் பார்ப்போம். 

ஒரு மாநிலத்தின் ஆளுநரை குடியரசுத் தலைவரே நியமிப்பார். அவர் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் ஒரு மாநில ஆளுநரை நியமனம் செய்கிறார். ஒரு மாநில ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகும். எனினும் ஆளுநரின் பதவிக்காலம் முடிவதற்குள் ஆளுநரை குடியரசுத் தலைவர் மாற்ற முடியும். ஆளுநர் பதவி என்பது அரசியலைமைப்பு சட்டத்தின்படி மிகவும் முக்கிய பதவியாகும். ஏனென்றால் ஒரு மாநில ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. அத்துடன் ஒரு மாநில தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமையும் பட்சத்தில் மாநில முதல்வராக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அம்மாநில ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் ஒரு மாநிலம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருக்கும் போது அம்மாநில நிர்வாகத்தை தலைமை செயலாளரின் உதவியுடன் ஆளுநர் கவனித்து கொள்வார். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு மாநில ஆளுநராக நியமிக்க இரண்டு நிபந்தனைகள் உள்ளன. அதாவது முதலில் அவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அத்துடன் அவருக்கு 35 வயது நிரம்பியிருக்க வேண்டும். இவை தவிர கூடுதலாக இரண்டு நடைமுறைகளை கடைபிடிக்கப்படுகின்றன. அதாவது ஒரு மாநில ஆளுநராக நியமிக்கப்படுபவர் அந்த மாநிலத்தை சார்ந்தவராக இருக்க கூடாது. அத்துடன் ஒரு மாநில ஆளுநரை நியமிக்கும் முன்பு அம்மாநில முதலமைச்சரிடம் குடியரசுத் தலைவர் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதாகும். எனினும் இந்த இரண்டு நடைமுறைகள் சில நேரங்களில் கடைபிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன.

மேலும் ஒரு மாநில ஆளுநரை பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்தவித விதிமுறைகளும் அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலம் மாநில ஆளுநரை பதவியிலிருந்து நீக்கமுடியும். அத்துடன் ஒரு மாநில ஆளுநர் தனது பதவிக் காலத்தில் இறந்துவிட்டால், அம்மாநிலத்திற்கு புதிய ஆளுநரை நியமிக்கலாம் அல்லது புதிய ஆளுநர் நியமிக்கும் வரை அம்மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தற்காலிக ஆளுநராக செயல்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.