டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் பின்னரும் பணப்புழக்கம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் கூறினார். ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னரும் பணப்புழக்கம் அதிகரித்திருப்பது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டில் 17.74 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதுவே நடப்பாண்டு அக்டோபர் மாத இறுதியில் 29.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.