வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.61 .50 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
இந்தவகையில், இந்த மாதத்திற்கான மாற்றம் செய்யப்பட்ட விலை பட்டியலின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 61 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்து, 1964.50 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது.
ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், 818.50 ரூபாயாகவே நீடிக்கும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.