வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு நேற்று அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சுமார் 2,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வணிக ரீதியான சிலிண்டர்களின் விலையை 100 ரூபாய் உயர்த்தியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் வணிக ரீதியான சிலிண்டர்கள் விலை 2 ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 203 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ. 1,898.50 என்று இருந்த நிலையில், இந்த மாதமும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியைப் பொறுத்தவரை 19 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலை ரூ. 1,731.50 காசுகளாக இருந்த நிலையில் தற்போது அது 1,833 ரூபாயாக உயர்ந்துள்ளது, அதிகபட்சமாக பெங்களூரு, கொல்கத்தா மற்றும் சென்னையில் சுமார் 2,000 ரூபாயை எட்டியுள்ளது.
ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வீடுகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ. 918.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.