இந்தியா

மருத்துவர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் 6 மாத சம்பளம் கிடையாது - மகாராஷ்டிர அரசு அதிரடி

Rasus

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 3500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று மாலை 8 மணிக்குள் வேலைக்கு திரும்பாவிட்டால் அவர்களுக்கு ஆறு மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாது என மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது.

பணிக்கு திரும்ப சொல்லி 1000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மார்ச் 16-ம் தேதி மும்பையில் உள்ள லோகமானிய திலகர் மருத்துவமனையில் 10 வயது சிறுமி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள், அங்கு பணி புரியும் மருத்துவரை ஒருவரை அடித்தனர். அதேபோல, அவுரங்காபாத் அரசு மருத்துவ கல்லூரியின் 5 மருத்துவர்கள் ஒரு நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டனர்.

இதுபோன்ற மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க கோரியும் நான்காவது நாளாக விடுப்பு போராட்டத்தில் 3500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பல அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவர்களின் போராட்டத்திற்கு பிறகு, பணி புரியும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க 1,100 காவலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்தார்.