இந்தியா

முப்படைகளில் பணியாற்றிய பஞ்சாப் வீரர் பிரிதிபால் சிங் - 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

முப்படைகளில் பணியாற்றிய பஞ்சாப் வீரர் பிரிதிபால் சிங் - 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

jagadeesh

இந்தியாவின் ராணுவம், கடற்படை, விமானப்படையில் பணியாற்றிய பிரிதிபால் சிங் கில் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

மூன்று படைகளிலும் பணியாற்றிய பெருமை ஓய்வுபெற்ற கர்னல் பிரிதிபால் சிங்கையே சேரும். இரண்டாம் உலகப் போருக்கு முன்பே விமானப்படையில் இளம் விமானியாக தனது பணியை தொடங்கியுள்ளார். அதன்பிறகு கடற்படையிலும், ராணுவத்திலும் இணைந்து நாட்டிற்காக பணியாற்றியுள்ளார். இரண்டாம் உலகப் போர் மற்றும் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தியா- பாகிஸ்தான் போரிலும் கலந்து கொண்டு போரிட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் தனது வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் பல ஆண்டுகள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் "1943 இல் இந்திய கடற்படையில் இணைந்தேன். பின்பு விமானம் படை. 1951க்கு பிறகு இந்திய ராணுவத்தில் இணைந்தேன். என்னால் 1965 இல் இந்தியா - பாகிஸ்தான் போரின்போது எதிரி கேம்பில் புகுந்து தாக்குதல் நடத்தி 4 துப்பாக்கிகளை கொண்டு வந்தது மறக்க முடியாதது" என்றார். கர்னல் பிரிதிபால் சிங் கில் முப்படைகளில் இருந்தும் ஓய்வு பெற்ற பிறகு தனது சொந்த கிராமத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.