இந்தியா

நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: மயிரிழையில் மோதல் தவிர்ப்பு!

webteam

நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் மயிரிழையில் மோதலில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் இருந்து புனேவுக்கு விஸ்டாரா ஏ-320 நியோ என்ற விமானம் கடந்த புதன்கிழமை சென்றுகொண்டிருந்தது. விமானத்தில் 152 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க, விமான டிராபிக் கன்ட்ரோலில் இருந்து அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அந்த விமானத்தின் விமானி, 27 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அதே உயரத்தில் எதிர்திசையில் இருந்து மும்பையில் இருந்து போபால் செல்லும் ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. இரண்டும் 27 ஆயிரம் அடி உயரத்தில் எதிரெதிர் திசையில் நெருங்கி வந்தன. இதையடுத்து இரண்டு விமானங்களிலும் எச்சரிக்கைக் கருவி சத்தம் எழுப்பியது. பின்னர் தவறை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை வேறு பக்கமாகத் திருப்பினர். சில நொடிகளில் இந்த மாற்றம் நடந்தது. இல்லை என்றால் நடுவானில் விமானங்கள் நேருக்கு நேராக மோதி, கடும் விளைவை சந்தித்திருக்கும்.

இந்த சம்பவம் குறித்து விமான விபத்துகள் குறித்து விசாரிக்கும் ஆணையம் (AAIB) விசாரித்து வருகிறது.

மகாராஷ்டிரா வான் எல்லையில் இதே போன்ற சம்பவம் கடந்த ஜனவரி மாதமும் நடந்தது. ஐதராபாத்தில் இருந்து ராய்ப்பூர் நோக்கி சென்ற இண்டிகோ விமானமும் சிங்கப்பூரில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானமும் நாக்பூர் அருகே குறைந்த உயர வித்தியாசத்தில் பறந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.