இந்தியா

பஞ்சாப் காங்கிரஸில் தொடரும் நிழல் யுத்தம் : சன்னி-சித்து மோதலால் ஆம் ஆத்மி உற்சாகம்!

பஞ்சாப் காங்கிரஸில் தொடரும் நிழல் யுத்தம் : சன்னி-சித்து மோதலால் ஆம் ஆத்மி உற்சாகம்!

webteam

பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சன்னியின் நெருங்கிய உறவினர் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்து இருப்பது காங்கிரஸ் கட்சியில் நடைபெற்று வரும் சன்னி-சித்து கோஷ்டி பூசலை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. சரண்ஜீத்  சன்னி ஊழல்வாதி என்றும், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது எனவும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆதரவாளர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றத்தைக் கொடுக்க வேண்டும் எனவும், ஊழலற்ற ஆட்சியை வழங்க வேண்டும் எனவும் சித்து இலைமறைகாயாக பேசி வருகிறார்கள்.

நவ்ஜோத் சிங் சித்துவை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய ஆதரவாளர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சன்னி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். பஞ்சாப் முதல்வராக உள்ள சன்னியே, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.

சன்னியின் நெருங்கிய  உறவினர் பூபிந்தர் சிங் ஹனியை  அமலாக்கத் துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளது. சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய போது,  பூபிந்தர் சிங் ஹனி தொடர்புடைய இடங்களில் ரூ.10 கோடி ரொக்கம் மற்றும் கணக்கில் வராத தங்கம் பிடிபட்டது.

இந்தப் பணம் சன்னியின் ஊழல் வசூல் என சித்து ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் மணல் கொள்ளையில் முதல்வர் சன்னி பல நூறு கோடிகள் கையூட்டு குவித்துள்ளார் என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு. ஆகவே, காங்கிரஸ் கட்சியின் தலைமை அவரை நிராகரிக்க வேண்டும் என சித்து ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அமலாக்கத்துறை நடவடிக்கையானது பாஜகவின் தூண்டுதலின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் வரை பனிப்போர் தொடரும் என அக்கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர்கள் கருதுகிறார்கள்.

அமலாக்கதுறைக்கு பல விவரங்களை தெரிவித்து ஹனி மீதான நடவடிக்கைக்கு காரணமாக இருந்ததே சித்து கோஷ்டி எனவும் சன்னி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். சமீபத்தில் சித்து பிரசாரத்தில் ஈடுபடாமல், வைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு சென்றதையும் முதல்வர் வேட்பாளர் கோரிக்கையை அவர் வலியுறுத்தி வருவதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதே போல, சமீபத்தில் சித்து லட்சக்கணக்கில் மின்சாரக் கட்டணம் கட்டாமல் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பான செய்திகள் வெளிவந்தது சன்னி ஆதரவாளர்களின் வேலை என சித்து ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். பல லட்சம் ரூபாய் மின்சார கட்டணத்தை சித்து நிலுவையில் வைத்திருப்பது தொடர்பான தகவல், சன்னி அரசு மூலம் தான் கசிந்துள்ளது என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு. காங்கிரஸ் தலைமையை சித்து மறைமுகமாக மிரட்டுகிறார் என செய்திகள் வெளிவந்ததும் சன்னி ஆதரவாளர்களின் கைவண்ணம் என பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சன்னி-சித்து மோதலானது ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக இருக்கும் என பஞ்சாப் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என முழுவீச்சாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார். பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சன்னி குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் ஊழல் செய்துள்ளதாக அந்தக் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. அகாலிதளம் கட்சியும் இதே குற்றச்சாட்டை தெரிவித்து, சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் எனக் கூறி வருகிறது.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி என கருதப்படும் நிலையில், சன்னி-சித்து மோதலால் பாஜகவுக்கு பலன் கிட்டாது என கருதப்படுகிறது. சித்துவின் பரம எதிரியும், முன்னாள் பஞ்சாப் முதல்வருமான அம்ரீந்தர் சிங்குடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், அந்த கூட்டணிக்கு ஒரு சில இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அதேபோல, முன்பு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்த அகாலிதளம் கட்சிக்கும் வெற்றிவாய்ப்பு குறைவு என கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் எனவும், இதனால் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுவதாகவும் அந்த மாநில அரசியல் தலைவர்கள் கணித்துள்ளனர்.

- கணபதி சுப்பிரமணியம்.