இந்தியா

7000 ஊழியர்களை வேலையிலிருந்து தூக்கும் காக்னிசண்ட்?: அச்சத்தில் இந்தியர்கள்..!

7000 ஊழியர்களை வேலையிலிருந்து தூக்கும் காக்னிசண்ட்?: அச்சத்தில் இந்தியர்கள்..!

webteam

காக்னிசண்ட் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் சுமார் 7000 பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் காக்னிசண்ட். தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் இந்த நிறுவனத்தில் பெரும்பாலான இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரி பிரையன் கூறுகையில், காக்னிசண்ட் நிறுவனத்தில் 2 லட்சம் இந்தியர்கள் வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார். இது நாட்டில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட டி.சி.எஸ்-க்குப் பிறகு இரண்டாவது பெரிய ஐ.டி. நிறுவனமாகும். 

இந்த நிலையில் தற்போது காக்னிசண்ட் நிறுவனம், அடுத்து வரும் சில மாதங்களில் கிட்டதட்ட 7000 பேரை ஆள் குறைப்பு செய்யலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பெரும்பாலான இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. 

பணியில் இருக்கும் நடுத்தர ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை 10,000 - 12,000 பேர் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என ஏற்கனவே காக்னிசண்ட் கூறியிருந்தது. 5000 பேரை மறுசீரமைத்தல் மற்றும் மறுபயன்பாடு செய்வதாகவும் கூறியிருந்தது. வருவாய்க்கு பிந்தைய ஒரு மாநாட்டில் ஆய்வாளர்களுடன் இருந்த போது இந்த அறிவிப்பை வெளியிட்டது.

மொத்த பணி நீக்கத்தில் இந்தியாவில் சுமார் 5000 - 7000 பேர் வரையில் இருக்கலாம் என்றும், இது நிறுவனத்தின் செலவு குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதி எனவும் அதிகாரி பிரையன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பணி நீக்கமானது நிறுவனத்தின் தகவல் தொடர்பு மற்றும் ஊடகம், தொழில்நுட்ப பிரிவில் வருவாயை பாதிக்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் எவ்வளவு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்ற முழு விளக்கத்தை இந்த நிறுவனம் அளிக்கவில்லை.