இந்தியா

கேரளா: மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட 'கோக்' ஆலை - கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்!

கேரளா: மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட 'கோக்' ஆலை - கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்!

நிவேதா ஜெகராஜா

கேரளாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட 'கோக கோலா' தொழிற்சாலை தற்போது கொரோனா சிகிச்சை அளிக்கும் மையமாக மாறியிருக்கிறது.

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பிளாச்சிமடா கிராமத்தில்தான் இந்த மூடப்பட்ட 'கோக கோலா' தொழிற்சாலை அமைந்துள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமாக இருந்தபோது சிகிச்சை மையங்களை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவெடுத்து, அதனொரு பகுதியாக 2004-ல் மூடப்பட்ட இந்த தொழிற்சாலை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற கோக கோலா ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தது. இதற்கு கோக கோலா நிர்வாகம் செவிசாய்க்க, 600 படுக்கைகள் கொண்ட மையம் அமைக்கப்பட்டு கடந்த வாரம்தான் முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்.

இந்த மையத்தில் முதல் முறையாக இரண்டு நாட்களுக்கு முன்பு 25 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மையம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட கேரள மின்சாரத்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி, "கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியபோது தனியார் இடங்களில் சிகிச்சை மையங்கள் அமைக்க இடங்களை தேடினோம். ஒரு சிலர் மூடிக்கிடக்கும் இந்த ஆலையை பயன்படுத்தும் வகையில் 'கோக்' நிர்வாகத்தை அணுகுமாறு பரிந்துரைத்தனர். அதனடிப்படையில் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்று மூடியே கிடந்த ஆலையை சிகிச்சை மையமாக மாற்ற கோக கோலா நிறுவனம் அனுமதி வழங்கியதுடன் சிஎஸ்ஆர் நிதியை கொண்டு ஆலையின் முழு அலகையும் புதுப்பித்து கொடுத்தது. பின்னர் மருத்துவமனையாக மாற்றும் பணிகள் மூன்று வாரங்களில் முழுமையாக நிறைவடைந்து தற்போது திறக்கப்பட்டுள்ளது.

ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த கொரோனா மையத்தில் மொத்தம் 550 படுக்கைகள் உள்ளன. இதில் 100 ஆக்சிஜன் படுக்கைகள், 10 வெண்டிலேட்டர்கள், 40 ஐ.சி.யு. படுக்கைகள், குழந்தைகளுக்கு தனியாக 10 படுக்கைகள் உள்ளன. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 12 சுகாதார பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு தகுந்த பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன" என்று விளக்கமளித்தார்.

இந்துஸ்தான் கோக கோலா பீவரேஜஸ் (எச்.சி.சி.பி) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இந்த பிளாச்சிமடா அலகு 1999-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. 34 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, ஒரு காலத்தில் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்தது.

கேரளா மற்றும் தமிழ்நாடு சந்தைக்கு தேவையான கோக கோலாவை உற்பத்தி செய்யும் பொருட்டு, ஆரம்பிக்கப்பட்டது இந்த ஆலை. கிட்டத்தட்ட 400 தொழிலாளர்கள் இந்த ஆலை நேரடி வேலைவாய்ப்பு பெற்றுவந்த நிலையில், ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்களிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவதால், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மாசுபாட்டை ஏற்படுத்தும் கசடுகளை ஆலை வெளியேற்றுவதாகவும் கூறி இப்பகுதி மக்கள் கோக கோலா நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தத் தொடங்கினர்.

போராட்டம் பெரிதாக வெடிக்க, விவகாரம் நீதிமன்ற படியேறவும் தவறவில்லை. இதனால், இந்த ஆலை அப்போது பெரிதாக பேசப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதி வழங்கப்பட்டாலும், இந்த ஆலையை இயக்க வேண்டாம் என்று கோக கோலா முடிவு செய்தது. இதையடுத்து 2004 மார்ச் மாதம் ஆலை மூடப்பட்ட நிலையில், தற்போது கொரோனா சிகிச்சைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தகவல் உறுதுணை: The New Indian Express