இந்தியா

நான் சந்தோஷமாக இல்லை.. கண்கலங்கிய குமாரசாமி..!

நான் சந்தோஷமாக இல்லை.. கண்கலங்கிய குமாரசாமி..!

Rasus

நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். ஆனால் நான் அப்படி இல்லை என கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கண்கலங்கி பேசினார்.

கர்நாடாகவில் காங்கிரஸ் கூட்டணியுடன் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கர்நாடாகா முதலமைச்சராக குமாரசாமி பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாக ஜனதா தளம் கட்சி சார்பில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது வந்த குமாரசாமிக்கு பலரும் பூங்கொத்து கொடுக்க வரிசையில் காத்து நின்றனர். ஆனால் அவர்களின் பூங்கொத்தை ஏற்க மறுத்த குமாரசாமி கண்கலங்கி பேசினார். “ உங்கள் சகோதரர்களில் ஒருவன் முதலமைச்சராக ஆகி விட்டான் என எண்ணி நீங்கள் சந்தாஷமாக உள்ளீர்கள். அதற்காக எனக்கு மலர்கொத்து கொடுக்க வரிசையில் காத்து நிற்கிறீர்கள். ஆனால் நான் சந்தோஷமாக இல்லை. கூட்டணியுடன் ஆட்சி அமைப்பதில் ஏற்படும் வேதனை பற்றி எனக்குத்தான்  தெரியும்” என்றார். மேலும் பேசிய அவர், விஷம் அருந்திய சிவபெருமான் போல் தன்னுடை நிலை தற்போது இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கர்நாடகாவில் கடந்த மே 12-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றினாலும் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. அதன்படி குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.