பிரதமர் மோடி விமர்சனம் - முதல்வர் ஸ்டாலின் காட்டம் புதிய தலைமுறை
இந்தியா

பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை சாவி.. பிரதமர் விமர்சனம்.. முதல்வர் எதிர்வினை.. நடப்பது என்ன?

பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை சாவி தொடர்பாக பிரதமர் மோடியின் விமர்சனம்.. வி.கே.பாண்டியன் சொன்ன பதில்.. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த எதிர்வினை.. நடப்பது என்ன?

இரா.செந்தில் கரிகாலன்

பூரி ஜெகந்நாதரை மையப்படுத்தி, பூரி தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா ஒடிசா அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருந்த நிலையில், தற்போது ஜெகன்னாதரை மையப்படுத்தி பிரதமர் மோடி தெரிவித்திருக்கும் கருத்துக்கு ஒடிசாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

அப்படி மோடி என்னதான் பேசினார், அதற்கான எதிர்வினை யாரிடமிருந்து வந்தது உள்ளிட்ட விஷயங்களை இங்கே பார்ப்போம்...
மோடி

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு தற்போது சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது. மே 13 தொடங்கி, மே 20, மே 25, ஜூன் 1 என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதில், இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோயில் இருக்கும் பூரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது. இந்தநிலையில், பூரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சம்பித் பத்ராவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி கடந்த 20-ம் தேதி ரோட் ஷோ நடத்தினார்.

அதுகுறித்து, பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், ‘’பூரி ஜெகன்னாதரே மோடியின் பக்தர்தான்’’ எனப் பேசியிருந்தார். இது ஒடிசா அரசியல் களத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கியது. ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் என பலரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடகத்தில் இந்த காணொளியை பகிர்ந்து சம்பித் பத்ரா பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

Congress

இந்தநிலையில் நவீன் பட்நாயக்கின் எக்ஸ் பதிவுக்குப் பதிலளித்த சம்பித் பித்ரா, ``இன்று பிரதமர் மோடியின் ரோட் ஷோ மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து நான் பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டி அளித்துக் கொண்டிருந்தேன். எல்லா இடங்களிலும் பிரதமர் மோடி ஜெகந்நாதரின் தீவிர பக்தர் என்றே சொல்லி வந்தேன்.

ஆனால் ஏதோ ஒரு இடத்தில் தவறுதலாக மாற்றி கூறிவிட்டேன். உங்களுக்கும் இது புரியும் என்று எனக்கு தெரியும். ஒன்றும் இல்லாத பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் அனைவருக்குமே சிலநேரங்களில் நாக்கு குளறும். நன்றி” என பதில் அளித்துள்ளார்.

சம்பித் பித்ரா
அதுமட்டுமில்லாமல், ஜெகன்னாதர் மோடியின் பக்தர் என தவறுதலாகக் கூறியதற்காக மூன்று நாள்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் சம்பித் பித்ரா கூறியிருந்தார்.

இந்தநிலையில், தமிழரும், பிஜு ஜனதாதளம் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே.பாண்டியன்,

``வெயிலும் தூசியும் அதிகம் இருப்பதால் சம்பித் பத்ரா தனது உடல்நிலையை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். சரியாக சாப்பிட்டு அவர் கவனமாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், அவர் மயக்கம் அடையக் கூடாது. அவர் ஒரு மருத்துவர், எனவே என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

வி.கே.பாண்டியன்

அதோடு, ``பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது.மதத்தையோ, மகாபிரபு ஜெகநாதரையோ தேர்தலில் இழுப்பதை பிஜு ஜனதா தளம் விரும்பாது’’ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், அதே ஜெகன்னாதரை மையப்படுத்தி முன்னாள் ஐ.ஏ.எஸ் வி.கே.பாண்டியனை பிரதமர் மோடி மறைமுகமாக செய்த விமர்சனம் ஒன்று தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ஒடிசாவின் அங்குல் நகரில் பாஜக சார்பில் நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போன விவகாரம் குறித்து பேசினார். அதில், “நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாக காணவில்லை. இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்” என்றார்.

மோடி

பிரதமரின் இந்தக் கருத்துக்கு வி.கே.பாண்டியன் “பிரதமரின் கீழ் பல அதிகாரிகள் உள்ளனர். அவர்களை வைத்து பிரதமர் கண்டுபிடித்துத் தரவேண்டும். பிரதமர் மோடியிடம் இதை நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்’’ என எதிர்வினையாற்றினார்.

இந்தநிலையில் பிரதமர் மோடியின் கருத்துக்கு கடுமையான எதிர்வினையாற்றியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

``ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழகத்தில் இருப்பதாகப் பேசி இருக்கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் பூரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழக மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.

ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழக மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா?

தமிழக மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழகத்தை அவமதிப்பது அல்லவா? தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

தமிழகத்துக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழக மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - பிரதமர் நரேந்திர மோடி

இந்தநிலையில், “பிரதமர் மோடியின் கருத்தை தமிழர்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததாக ஸ்டாலின் திரித்திப் பேசுகிறார், அது பொய்” என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏழு கட்டமாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், முதற்கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டபோதும், தற்போதுவரை தமிழ்நாட்டை மையப்படுத்தி, தமிழ்நாட்டு தலைவர்களை மையப்படுத்தி விவாதங்கள் நடந்துகொண்டேதான் இருக்கிறது.