மு.க.ஸ்டாலின் pt web
இந்தியா

பள்ளிகளுக்கான நிதி.. தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு..? புட்டு புட்டு வைத்த ஆய்வுக்கட்டுரை!

PT WEB

தேசிய கல்விக் கொள்கை

தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதால், சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதி வழங்க மறுப்பதா? என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் கீழ் சிறப்பாக செயல்படும் மற்றும் பின்தங்கிய மாநிலங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமக்ர சிக்ஷா அபியான் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது. பள்ளி கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட பள்ளிகளுக்கு தேவையான நிதியை ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஆங்கில நாளிதழ் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை

இந்நிலையில், 2024-25ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்ட நிதி தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்காத நிலையில், 2019 முதல் 2021 வரை இந்த திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி பகிர்மானம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதாவது, நாட்டின் 22 முக்கிய மாநிலங்கள், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் உள்ள 20 பிரிவுகளில் எந்தெந்த இடத்தில் உள்ளன, சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எவை என்ற தரவுகளை வெளியிட்டுள்ளது.

mk stalin

குறிப்பாக, 6 முதல் 10 வயதுடைய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான கல்வியில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன. ஆனால், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, கேரளாவை காட்டிலும் பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தாரளமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

20 பிரிவுகளில் 19ல் தமிழ்நாடு முன்னிலை

இதேபோல், 11 முதல் 13 வயதுடைய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான கல்வியில் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையிலும், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் பின்தங்கியும் உள்ளன. 14 முதல் 15 வயதுடைய உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கல்வியில் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையிலும், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் பின்தங்கியும் உள்ளன. 16 முதல் 17 வயதுடைய மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கல்வியில் கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையிலும், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் பின் தங்கியும் உள்ளன.

இப்படி ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 20 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட கேரளா, 19 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, 18 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட டெல்லி, 15 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட மேற்குவங்கம், 12 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எழுப்பிய கேள்வி

அதேநேரம், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 20 பிரிவுகளில் எட்டு பிரிவுகளில் மட்டுமே சிறப்பாக செயல்பட்ட குஜராத், மூன்று பிரிவுகளில் மட்டும் சிறப்பாக செயல்பட்ட மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேம் மற்றும் 2 பிரிவுகளில் மட்டும் சிறப்பாக செயல்பட்ட பீகாருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கட்டுரையை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதால் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பதா?" என கேள்வி எழுப்பியுள்ளார். இலக்கை அடையாத மாநிலங்களுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி அளிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதான் மத்திய அரசு கல்வியை மேம்படுத்தும் முறையா? என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் எது சரி என்பது மக்களின் பார்வைகே விட்டுவிடுகிறேன் என குறிப்பிட்டுள்ளளார்.