ஜல சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்து பேசினார்.
மத்திய நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். நிதி ஆயோக்கின் 5வது பொதுக் கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார்.
அவர் அங்கு பிரதமர் மோடியை இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழகம் சந்தித்து வரும் வறட்சி, காவிரி நீர் பிரச்னை உள்ளிட்ட விவரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச் சர் எடுத்துரைத்ததாக தெரிகிறது.இதனிடையே முதல்வர் பழனிசாமி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். பின்னர், ஜல சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார். காவிரி நதிநீர் ஆணைய உத்தரவு படி தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும் கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அவர், அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் வலியுறுத்தினார்.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த நிலையில் தமிழக முதல்வரும் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்து தமிழக முதல்வர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசுகிறார்.