இந்தியா

“பிரதமர் கூறியது உண்மைதான் ” - விமானப்படை பிராந்திய தளபதி ரகுநாத்

webteam

மழை மேகங்கள் வானில் சூழ்ந்ததால், பாகிஸ்தானின் ரேடார் கண்களிலிருந்து இந்திய விமானங்கள் எளிதாக தப்பியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்தை, விமானப்படையின் மேற்கு பிராந்திய தளபதி ரகுநாத் நம்பியார் ஆமோதித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய பிரதமர் மோடி, பால்கோட் தாக்குதல் நடந்த அன்று வானிலை மோசமாக இருந்தது. அந்த நேரத்தில் நமது விமானங்களை எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் காக்க உதவும் என நினைத்தேன். அதன் அடிப்படையில் தான் தாக்குதலை அன்றே நடத்தப் பணித்தேன் எனத் தெரிவித்தார். 

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளானது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் மோடியின் இந்தப் பேச்சு குறித்து விமர்சனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கார்கில் போர் நடந்தபோது போரில் வீரமரணமடைந்த விமானப்படை விமானி அஜெய் அஹூஜாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய விமானப்படையின்‌ மேற்கு பிராந்திய தளபதி ரகுநாத் நம்பியார், மழை மேகங்கள் ரேடார் கண்களை மறைக்கும் என பிரதமர் கூறியது உண்மைதான் எனத் தெரிவித்தார்.

மேலும் அடர்த்தியான மழை மேகங்கள் வானில் சூழும்போது, ரேடாரால் விமானங்களை துல்லியமாக கண்டுபிடிக்க முடியாது என்றும் ரகுநாத் நம்பியார் கூறினார்.