இந்தியா

மேகவெடிப்புக்கு வெளிநாட்டு சதியே காரணம் - அதிர்ச்சியூட்டிய முதல்வர் சந்திரசேகர ராவ்!

மேகவெடிப்புக்கு வெளிநாட்டு சதியே காரணம் - அதிர்ச்சியூட்டிய முதல்வர் சந்திரசேகர ராவ்!

ஜா. ஜாக்சன் சிங்

"தெலங்கானாவில் நிகழ்ந்த மேகவெடிப்புக்கு வெளிநாட்டு சதியே காரணம்" என்று அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தெலங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரக்காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களும், கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை - வெள்ளத்துக்கு இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர் மழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனிடையே, இந்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "தெலங்கானாவில் மேகவெடிப்பு என்ற புதிய நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கு பின்னால் சதிச்செயல் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதில் வெளிநாட்டு சதி இருப்பதாக நான் கருதுகிறேன். வெளிநாட்டினர் திட்டமிட்டே தெலங்கானாவில் இந்த சதிச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர், உத்தராகண்ட், லடாக் ஆகிய பகுதிகளில் இதுபோன்ற செயலில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். இப்போது அவர்கள் தெலங்கானாவை குறிவைத்துள்ளனர்" என்றார்.

மேகவெடிப்பு என்பது இயற்கையாக ஏற்படும் நிகழ்வு எனக் கூறப்படும் நிலையில், தெலங்கானா முதல்வரின் இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் தெரியாமல் முதல்வர் இவ்வாறு பேசியதாக சமூக வலைதளங்களில் நெட்டீசன்கல் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேகவெடிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறைந்த நேரத்துக்குள் அளவுக்கு அதிகமாக மழை பொழியும் நிகழ்வு என வானிலை ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.