இந்தியா

டெல்லி செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு தடை - என்ன காரணம்?

டெல்லி செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு தடை - என்ன காரணம்?

webteam

டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் விரும்பி கண்டு மகிழும் பிரபல சுற்றுலாத்தலமான செங்கோட்டையில், தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பார்வையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின கொண்டாட்டங்கள் முழுவதுமாக முடிவடைந்தப் பின்னரே, செங்கோட்டையைச் கண்டுகளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் மற்றும் டெல்லியில் உள்ள குதுப்மினார் போலவே, சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கும் மிகவும் பிரபலமான செங்கோட்டை நினைவுச் சின்னம் இருந்து வருகிறது. டெல்லியின் மிகவும் பழமையான கட்டிடங்களில் ஒன்றான செங்கோட்டையை இந்தியாவின் மிகப்பெரிய கோட்டைகளின் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. அங்குள்ள மொகலாயர் கால மற்றும் ஆங்கிலேயர் கால பல்வேறு கட்டுமானங்கள் மற்றும் பழமை வாய்ந்த பொருட்கள் ஆகியவற்றை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர். ஆகவே தற்போதைய பார்வையாளர்களுக்கான தற்காலிக தடை தலைநகர் டெல்லி பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

நாட்டின் பிரதமர் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் கொடியேற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துவார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முப்படையின் தளபதிகளில் கலந்து கொள்வது மரபு. ஆகவே எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் இருக்க முழு வீச்சாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.

செங்கோட்டையை அழகுப்படுத்தி சுதந்திர தின விழாவுக்கு தயார் படுத்துவது, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, மற்றும் நிகழ்ச்சிக்கான ஒத்திகைகளை நடத்துவது ஆகிய பணிகளுக்காக செங்கோட்டையில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி ஆட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த சமயத்தில், டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட பலர் செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால், இந்த முறை முன்பை விட அதிகமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆகவே செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் தற்போதையிலிருந்து பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிஆர்பிஎப் உள்ளிட்ட துணை இராணுவங்களை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் வாகனங்கள் அந்த வளாகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்த தகவல் மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக உளவுத்துறையை சேர்ந்தவர்கள் எந்த விதமான சதி வேலைக்கும் வாய்ப்பில்லாத வகையில் அந்தப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துவார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடைந்து அதற்காக அங்கே முகாமிடும் பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய முகாம்களுக்கு திரும்பும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.