உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சவுகாம்பா-3 மலைச் சிகரத்தில் ஏறும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனை மிச்சேல் தெரசா, இங்கிலாந்தைச் சேர்ந்த வீராங்கனை ஃபே மேனர்ஸ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். 5303 மீட்டர் (17,400 அடி) கொண்ட சவுகாம்பா-3 மலைச் சிகரத்தில் கடந்த 3-ஆம் தேதி இருவரும் ஏறிக் கொண்டிருந்தபோது, தாங்கள் கொண்டு சென்ற மலையேற்றத்திற்கான கருவிகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தவறவிட்டுள்ளனர்.|
இதனால் சிகரத்தின் மீது ஏற முடியாமல் 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் 3 நாட்களாக இருவரும் சிக்கித் தவித்தனர். கிட்டத்தட்ட 72 மணி நேரம் சிக்கித் தவித்தனர். இதனிடையே, சிகரத்தில் மலையேற்ற வீராங்கனைகள் இருவரும், தங்கள் தூதரகங்களுக்கு பேஜர் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனடியாக இந்திய தூதரகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில், கடந்த 4ஆம் தேதி, இந்திய விமானப்படை (IAF) உத்தரபிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரில் இருந்து இரண்டு சீட்டா ஹெலிகாப்டர்களை கண்டறிய அனுப்பியது. ஆனால், கடும் பனி காரணமாக ஹெலிகாப்டர்கள் அவர்களைக் கண்டறிய முடியாமல் திரும்பின. தொடர்ந்து மறுநாள், IAF ஹெலிகாப்டர்கள் 4,990 மீட்டர் உயரத்தில் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இரண்டு நாட்கள் மோசமான வானிலைக்குப் பிறகு, இந்திய விமானப்படையின் சீட்டா ஹெலிகாப்டர் 17,400 அடி உயரத்தில் சிக்கித் தவித்த அந்த வீராங்கனைகளைக் கண்டுபிடித்தது. அவர்களை பத்திரமாக மீட்டு, முகாமுக்கு அழைத்துவந்தனர். அதன்பிறகு, அவர்கள் அந்தந்த தூதரகங்களுக்கு அனுப்பவைக்கப்பட்டனர்.