தென்மேற்கு டெல்லியின் நஜாப்கர் பகுதியைச் சேர்ந்த பெண் நண்பர் (காதலி) ஒருவருக்கு பிறந்த நாள் விழா வந்தது. இந்த விழாவில் அந்தப் பெண் நண்பருக்கு 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஐபோன் பரிசளிக்க விரும்பியிருக்கிறார். இதற்காக அந்த மாணவர், தனது தாயாரின் தங்க காதணி, தங்க மோதிரம் மற்றும் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுள்ளார்.
பின்னர், அதை டெல்லியில் உள்ள கக்ரோலா பகுதியில் உள்ள நகைக் கடைகளில் விற்றுவிட்டு, அந்தப் பெண்ணுக்கு ஐபோனை வாங்கிக் கொடுத்துள்ளார். தனது தங்க நகைகளைக் காணாமல் போனதையடுத்து அந்த மாணவரின் தாயார் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸ், அந்த மாணவர் திருடியதை ஒப்புக் கொண்டார்.
பின்னர் அவர் வாங்கிக் கொடுக்கப்பட்ட ஆப்பிள் ஐபோனும் மீட்கப்பட்டது. பிறந்த நாளின்போது பெண் நண்பரின் மீது அபிப்ராயத்தை ஏற்படுத்துவதற்காக, அவர் தனது தாயிடம் பணம் தருமாறு அணுகியுள்ளார். ஆனால், ’அந்த அளவுக்கு நம்மிடம் வசதி இல்லை. ஆகையால் படிப்பில் கவனம் செலுத்து’ என அவரது தாயார் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த மாணவர், பணத்தை திருட முடிவு செய்துள்ளார் என போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், அந்த மாணவரிடம் இருந்து தங்க நகையைப் பெற்ற கமல் வர்மா என்ற 40 வயதுடைய நகைக் கடைக்காரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.