சிறுமியின் சிறுகதை கோப்பு படம்
இந்தியா

கேரளா|நிலச்சரிவால் ஏற்பட்ட பேரிடர்..அன்றே ஆபத்தைக் கணித்த சிறுமியின் சிறுகதை! அப்படியே நடந்த சோகம்!

வயநாட்டைச் சேர்ந்த சிறுமி கடந்தாண்டு எழுதிய சிறுகதை ஒன்றில் வரும் இயற்கை பேரிடர் அப்படியே நிகழ்ந்துள்ள சம்பவம் பலரையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

சண்முகப் பிரியா . செ

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். மேப்பாடி அருகே மலைப்பகுதிகளில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மலப்புரம், நீலம்பூர் பகுதிக்குப் பாயும் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வயநாட்டில் உள்ள மேப்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மாலா பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது.

இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 340-ஐ கடந்துள்ளது.மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப்பணிகளில் அரசாங்கத்தினரும் பொது மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

வயநாடு

இந்நிலையில், வயநாட்டைச் சேர்ந்த சிறுமி கடந்தாண்டு எழுதிய சிறுகதை ஒன்றில் வரும் இயற்கை பேரிடர் அப்படியே நிகழ்ந்துள்ள சம்பவம் பலரையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. வயநாட்டில் சூரல்மலை பகுதியில் உள்ள வெலர்மலா என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளியில் லயா என்ற சிறுமி படித்து வருகிறார். 8ம் வகுப்பு படித்து வரும் இவர் கடந்தாண்டு பள்ளி இதழுக்காக சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார். அதில் நீர்வீழ்ச்சி ஒன்றில் மூழ்கிய சிறுமி ஒருவர் பறவையாக திரும்பி வந்து, நீர் நிலைகளுக்கு அருகில் சென்றால் ஏற்படும் ஆபத்து குறித்து தன் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

அந்தக் கதையில் அனஸ்வரா மற்றும் அலம்க்ரிதா என்ற இரண்டு சிறுமிகள் நீர்வீழ்ழ்சியைக் காண தங்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது ஒரு பறவை தோன்றியுள்ளது. அந்தப் பறவை, ‘‘குழந்தைகளே இங்கிருந்து தப்பிச் செல்லுங்கள். இங்கு ஆபத்து நேரிடவுள்ளது’’ என கூறி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை எச்சரிக்கிறது. இதைக் கேட்டு பயந்துபோன குழந்தைகள் உடனே அங்கிருந்து வெளியேறியுள்ளனர். வெகு தூரம் ஓடிச்சென்று அவர்கள் மலையைத் திரும்பி பார்த்தபோது, அங்கு திடீரென வெள்ளம் வருவதை காண்கின்றனர். பின்னர் பறவையைப் பார்க்கையில் அந்தப் பறவை ஒரு அழகிய பெண்ணாக மாறுவதைக் கண்டுள்ளனர். தனக்கு நேர்ந்த சோக நிலை மற்ற எந்த குழந்தைகளுக்கும் நேர்ந்து விடக் கூடாது என எச்சரிப்பதற்காக அந்தப் பெண் திரும்பி வந்ததாகக் கதையில் கூறப்பட்டுள்ளது.

அந்த கதையில் வரும் இயற்கைச் சீற்றம் போல் தற்போது வெலர்மலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஊரையே தரைமட்டமாக்கியுள்ளது. இதில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கதையை எழுதிய மாணவி லயாவின் தந்தை லெனினும் உயிரிழந்துள்ளார். அதுமட்டுமல்லாது வெலர்மலாவில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த 497 மாணவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 8ம் வகுப்பு சிறுமி எழுதிய சிறுக்தையில் வருவது போலவே அந்தப்பகுதி நிலச்சரிவில் மூழ்கியுள்ள சம்பவம் பலரையும் சோக் அலையில் ஆழ்த்தியுள்ளது. ம்க்கள் சிறுமியின் கண்இப்பு குறித்து ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.