ராணுவப் பாலம் எக்ஸ் தளம்
இந்தியா

வயநாடு நிலச்சரிவு| பாலம் கட்டி மக்களை மீட்கும் ராணுவத்திற்கு கடிதம் எழுதிய 3ஆம் வகுப்பு மாணவர்!

கேரள வயநாட்டில் ராணுவம் ஆற்றிவரும் சேவையைக் கண்டு 3-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், ராணுவத்திற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Prakash J

அதிகனமழையால் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவு காரணமாக முண்டக்கை, சூரல்மலை, ஆட்டமலா, நூல்புழா பகுதிகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. மண் குவியலில் ஏராளமான வீடுகள் மூழ்கிய நிலையில், 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். ராணுவத்தினர், விமானப் படையினர், காவல் துறையினர் எனப் பலரும் இரவுபகலாக தொடர்ந்து மீட்புப் பணியில் களப்பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ராணுவம் செய்துவரும் சேவையைக் கண்டு 3-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், ராணுவத்திற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ”அன்புள்ள இந்திய ராணுவமே.. எனது அன்புக்குரிய வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, அழிவை கண்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் மீட்பதைக் கண்டு நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன். நீங்கள் பிஸ்கட் சாப்பிடும் வீடியோவைப் பார்த்தேன். அதுதான் உங்கள் பசியைப் போக்கியது. தவிர அதன்மூலம் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. ஒருநாள் இந்திய இராணுவத்தில் நானும் சேர்ந்து என் தேசத்தை பாதுகாக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள AMLP பள்ளியில் படிக்கும் மாணவரான ரேயன், மலையாள மொழியில் எழுதியுள்ள அந்தக் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: OLYMPIC குத்துச்சண்டை சர்ச்சை|மகளின் பாலினம் குறித்து எமோஷனலாக பேசிய தந்தை! மன்னிப்புகேட்ட வீராங்கனை

மாணவர் ரேயன் எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தை இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருப்பதுடன், அதற்குப் பதிலும் எழுதியுள்ளது. அது, ”உங்கள் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்களை ஆழமாகத் தொட்டுள்ளது. துயர் நிறைந்த காலங்களில், நாங்கள் நம்பிக்கையின் கலங்கரைவிளக்கமாக இருக்கிறோம். உங்கள் கடிதம் இந்த பணியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உங்களைப் போன்ற ஹீரோக்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய எங்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். நீங்கள் சீருடை அணியும் நாளை நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்களுடன் இணைந்து நிற்போம், நாங்கள் எங்கள் தேசத்தை பெருமைப்படுத்துவோம், உங்கள் தைரியத்திற்கும் உத்வேகத்திற்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளது.

நிலச்சரிவில் முற்றிலும் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள சூரல்மலை மற்றும் முண்டக்கையை மீண்டும் இணைப்பதற்காக, 190 அடி பெய்லி பாலத்தை இந்திய ராணுவம் 31 மணிநேரம் அயராது உழைத்து கட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?”ஒலிம்பிக்கில் தங்கம்வென்ற சகவீராங்கனைக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த வீரர்