குஜராத்தில் 12ஆம் வகுப்பு பாடத்தில் இடம்பெற்றிருந்த "முஸ்லிம் விரோத கலவரங்கள்" என்ற பாடப்பகுதி தற்போது குஜராத் கலவரங்கள் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் நடைப்பெற்றது. சுமார் இரண்டு மாத காலம் நடைப்பெற்ற இந்தக் கலவரத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தடுக்க அப்போதைய குஜராத் மாநில அரசு தவறிவிட்டதாக தேசிய மனித உரிமைகள் குற்றம்சாட்டியது. இந்தக் கலவரத்தின் போது தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தான் அப்போது குஜராத்தில் முதலமைச்சராக இருந்தார். குஜராத் கலவரத்தில் 790 இஸ்லாமியர்கள் மற்றும் 254 இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223பேர் காணாமல் போனதாகவும் 2500பேர் காயமடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்தது.
இச்சம்பவம் அரசியல் அறிவியல் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் அரசியல் என்ற பாடப்பகுதியில் குஜராத் கலவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரிய அளவிலான வன்முறை நடந்தது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இப்புத்தகத்தின் மறுபதிப்பில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை என்ற வாசகம் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய வன்முறை அரங்கேறியது என இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக பாடநூல்கள் தயாரிக்கப்படும் கழகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசியல் அறிவியல் பாடத்தில் குஜராத்தில் நடைப்பெற்ற கலவரம் குறித்த பகுதியில் "முஸ்லிம் விரோதம்" என்ற வார்த்தையை கொண்டிருந்தது. புத்தகங்களைப் புதுப்பிப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தபோது, அதைப் பற்றி நாங்கள் தெரிவித்தோம். இதனையடுத்து குஜராத் கலவரம் என திருத்திவிட்டோம் எனக் கூறினார்.மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் என்.சி.இ.ஆர்.டியின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆய்வுக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்தப் பகுதியில் சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.