உத்தரப்பிரதேசத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. ஆனால் இது நல்ல முன்னேற்றம் தான் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் தாங்கள் தேர்வுகளை கடுமையாக கண்காணித்ததே இதற்கு காரணம் எனவும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 10 லட்சம் மாணவர்கள் எழுதிய பள்ளிப் பொதுத்தேர்வை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்ததாக கூறினார். இதற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் சிறப்புப் படையினரை தேர்வு மையங்களின் அனைத்து இடங்களிலும் பணியமர்த்தியதாக தெரிவித்தார். இந்த தீவிர கண்காணிப்பின் மூலம் தேர்வில் முறைகேடு செய்வது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனால் இந்த வருடம் எந்த மாணவரும் தேர்வில் முறைகேடு செய்யவில்லை எனவும், அதன் எதிரொலியே தேர்ச்சி விகிதத்தின் குறைவு எனவும் சுட்டிக்காட்டினார்.
உத்தப்பிரதேசத்தில் கடந்த வருடம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 81.2 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த வருடன் 75.16 குறைந்துள்ளது. இதேபோன்று கடந்த வருடத்தில் 82.6 சதவிகிதமாக இருந்த 12ஆம் வகுப்பு தேர்ச்சி, இந்த வருடன் 72.43 சதவிகிதமாக குறைந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இதற்கு முன் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இதன் காரணமாகவே இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் உத்தரப்பிரதேசத்தில் பள்ளிப் பொதுத்தேர்வின் தேர்ச்சி விகிதம் குறைவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2008ஆம் ஆண்டு மாயாவதி முதலமைச்சராக இருந்தபோது, இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 10ஆம் வகுப்பில் 40 சதவிகிதம் மாணவர்களும், 12ஆம் வகுப்பில் 65 சதவிகதம் மாணவர்களும் மட்டுமே தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.