கேரளா முகநூல்
இந்தியா

கோர தாண்டவமாடும் மழை ஒருபுறம்! மோதிக்கொள்ளும் அரசுகள் மறுபுறம்! கேரளா vs மத்தியஅரசு! என்ன நடக்கிறது?

PT WEB

வயநாடு நிலச்சரிவு பெரும் துயரத்திற்கு வழி வகுத்திருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு கையாளப்பட வேண்டிய இந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் வார்த்தை மோதல் வெடித்திருக்கிறது.

கேரள மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் இந்தியாவையே உலுக்கி, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. மாநிலங்களவையில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டபோது, பேரிடர் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

மத்திய அரசிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டன. தொடர்ந்து விவாத்தில் பேசிய அமித்ஷா, ”கடந்த 23 ஆம் தேதி கனமழை குறித்தும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கேரள அரசை எச்சரித்தோம். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் எச்சரிக்கை வழங்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டது. கேரள அரசு என்ன உஷார் நடவடிக்கை எடுத்தது?” என கேள்வி எழுப்பினார்.

ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், நாடாளுமன்றத்தில் கூறப்பட்டவை உண்மையல்ல என தெரிவித்துள்ளார். மேலும் ,“ இந்திய புவியியல் ஆய்வு மையம், முன்கூட்டியே நிலச்சரிவு குறித்து எச்சரிக்கை விடுக்கவில்லை . நிலச்சரிவு நிகழ்ந்த பின்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டடது. இந்த நேரத்தில், மாற்றி மாற்றி குறை சொல்லி கொண்டிருக்க விரும்பவில்லை. ”என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் மத்திய, மாநில அரசுகள் மீட்பு பணிகளிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் கவனம் செலுத்துவதே அவசியமாகிறது. பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்புகளில் குறைபாடு உள்ளதா என்பதை இதற்கு அடுத்த கட்டமாக, அரசியலை புகுத்தாமல் விவாதிப்பதே, வருங்காலங்களில் பேரிடர்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.