viral video image x page
இந்தியா

மும்பை | விநாயகர் கோயில் லட்டு பாக்கெட்டில் எலிக்குட்டிகள்... வைரல் வீடியோ பற்றி நிர்வாகம் விளக்கம்!

Prakash J

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு காலத்தில் கலக்கப்பட்டிருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். தவிர, அதற்கான ஆதாரங்களும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இவ்விவகாரம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. தவிர, பக்தர்களிடமும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மும்பையில் பிரசித்திபெற்ற சித்தி விநாயகர் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாத பாக்கெட் வைக்கப்பட்டு இருந்த டிரே மற்றும் லட்டு பாக்கெட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்தி இருப்பதையும், அதில் எலிக்குட்டிகள் கிடப்பதையும் காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதள வீடியோ குறித்து ஸ்ரீசித்திவிநாயக் கணபதி மந்திர் அறக்கட்டளை தலைவர் சதானந்த் சங்கர் சர்வாங்கர், ”வீடியோவில் காட்டப்படும் இடம் அசுத்தமாக உள்ளது. அந்த வீடியோ கோயிலில் எடுக்கப்பட்டது அல்ல. வெளியில் எங்கோ அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படும். மேலும் இந்த விவகாரம் குறித்து துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சித்திவிநாயகர் கோயிலின் செயல் அதிகாரி வீணா பாட்டீல், “புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், கோயிலின் வளாகம் தெரியவில்லை. டிசிபி அளவிலான அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்பட்டு குழு அமைக்கப்படும்” என்றார்.