“நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்திடமிருந்து சுதந்திரமாக செயல்படுவது மட்டுமல்ல..” எனத்தொடங்கி பல விஷயங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட்டின் இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் செப் 11 அன்று இணையத்தில் வைரலான நிலையில், பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்திருந்த சந்திரசூட், “நீதிபதிகளின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமான ஒன்றுதான்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியான சந்திரசூட் வரும் நவ.,10ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இத்தருணத்தில் இதுதொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிக்கு பேட்டியளித்திருக்கும் அவர், “நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்திடமிருந்து சுதந்திரமாக செயல்படுவது மட்டுமல்ல..” என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்.
அதில், “தேர்தல் பத்திரம் தீர்ப்பிற்கு பிறகு,’ நீங்கள் மிகவும் சுதந்திரமாக செயல்படுகிறீர்கள்’ என நீதிமன்றத்தை பாராட்டியவர்கள்.... பிற வழக்குகளில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் ‘நீங்கள் சுதந்திரமாக செயல்படவில்லை’ என விமர்சிக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரை சுதந்திரத்திற்கான வரையறை இது கிடையாது. நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்திடமிருந்து சுதந்திரமாக செயல்படுவது மட்டுமல்ல. இன்று நமது சமுதாயம் மாறிவிட்டது. குறிப்பாக, தற்போதையை சமூக வலைதளங்களின் காலத்தில், ஆன்லைன் மீடியாவை பயன்படுத்தி பல்வேறு அமைப்புகள், குழுக்களிடமிருந்து ,’எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும்’ என்ற அழுத்தங்கள் வருகின்றன.
‘நீங்கள் எங்களுக்கு சாதகமான முடிவை கொடுக்கவில்லை என்றால், நீங்கள் சுதந்திரமாக செயல்படவில்லை என்று அர்த்தம்’ என்கிறார்கள். இதுதான் எனக்கு ஆட்சேபனையை ஏற்படுத்துகிறது. ஒரு நீதிபதி சுதந்திரமாக செயல்பட வேண்டுமெனில், நீதிபதியின் மனசாட்சிக்கு ஏற்றவாறு முடிவெடுக்கும் சுதந்திரம் நீதிபதிக்கு இருக்க வேண்டும். மனசாட்சி என்பது சட்டம் மற்றும் அரசியலமைப்பின் வழிகாட்டுதலின் படி இருக்க வேண்டும்.
ஒரு வழக்கு அரசாங்கத்திற்கு எதிரானதாக இருப்பின், அதன் முடிவை அரசாங்கத்திற்கு எதிரானதாகதான் நாங்கள் கொடுப்போம். அதேபோல அரசாங்கத்திற்கு சாதகமானதாக ஒரு வழக்கு இருக்கிறது என்று சட்டம் கூறினால், சட்டப்படி சாதகமாக தீர்ப்பை வழங்கிதான் ஆக வேண்டும். இது ஒரு நிலையான மற்றும் துடிப்பான நீதித்துறையின் இருப்புக்கு முக்கியமான ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.
இத்துடன், “விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக பிரதமர் எனது இல்லத்திற்குச் வந்தார். அதில் எந்தத் தவறும் இல்லை. இன்றைய சமூகத்தில் நீதித்துறை மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையேயான சந்திப்புகள் எப்போதும் தொடர்ந்து வருகிறது. நாங்கள் (நீதித்துறையினர் - நிர்வாகத்தில் இருப்பவர்கள்) ராஷ்டிரபதி பவனில் குடியரசு தினம் போன்றவற்றில் சந்திப்போம். ஆகவே எப்போதும் பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் நாங்கள் உரையாடி வருகிறோம். இவை எதுவும் வழக்கு ரீதியாக இருக்காது, வழக்கமான பொது உரையாடல்களாகவே இருக்கும்” என்றுள்ளார்.