சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமாணி, அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகள் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தர விட்டிருப்பதாக, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி மகாதேவன் அமர்வை கலைத்து உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில்ரமாணி உத்தரவிட்டார். இந்த நிலையில் அவர் மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதி பதவியில் இருந்து விலகினார்.
இதற்கிடையே சென்னை புறநகரில் 3 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு அவர் அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகளை வாங்கியுள்ளார்.
அவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர் மத்திய உளவுத்துறை 5 பக்க அறிக்கையை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அதில் தஹில்ரமாணி அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது குறித்தும், சிலைக்கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு அமர்வை அவர் தள்ளுபடி செய்தது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.