இந்தியா

“குடியுரிமை மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல” - அமித்ஷா

“குடியுரிமை மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல” - அமித்ஷா

webteam

மக்களவையை தொடர்ந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் நீண்ட விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமித்ஷா, “பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளிலும் உள்ள சிறுபான்மையினரின் மக்கள் தொகை 20 சதவிகிதம் குறைந்துள்ளது. அவர்கள் அனைவரும் ஒன்று கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்திருக்க வேண்டும். 

இந்த மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என்று சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்று தான். இந்த மசோதா எப்படி இந்திய இஸ்லாமியர்களுக்கு தொடர்புடையது? இந்திய இஸ்லாமியர்கள் எப்போதுமே இந்திய குடிமக்கள் தான். அவர்கள் மீது எப்போதும் ஒடுக்கு முறை கையாளப்படாது. 

இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நினைத்து கவலைப்பட தேவையில்லை. இந்த மசோதா அவர்களை பயம் கொள்ளச் செய்யும் வகையில் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் படி தான் செயல்படுகிறது. இந்த அரசின் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்” என்றார்.