இந்தியா

மாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா 

மாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா 

webteam

மக்களவையில் நிறைவேறிய நிலையில், குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

மக்களவையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்ட மசோதா, நீண்ட விவாதத்துக்குப் பிறகு நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆரோக்கியமான விவாதத்துக்குப் பிறகு, குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் உற்சாகமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த மசோதா இன்று பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மசோதா மீது விவாதம் நடத்துவதற்கு 6 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அவையில் 240 உறுப்பினர்கள் உள்ள நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 124 முதல் 130 வாக்குகள் வரை கிடைக்கும் எனத் தெரிகிறது. மக்களவையில் ஆதரவு தெரிவித்த சிவசேனா, மாநிலங்களையில் ஆதரவு தெரிவிப்பதற்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா தலைவரும், மகாராஷ்டிராவின் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்படும்போது தங்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். இந்து மதத்தைச் சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு அளித்ததாக அவர் விளக்கம் அளித்தார்.

மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்படும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது. இதனிடையே மசோதாவை கைவிடக் கோரி 600க்கும் அதிகமானோர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாபர் எழுத்தாளர் அமிதவ் கோஷ் , நடிகை நந்திதா தாஸ் , டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நாட்டின் முதலாவது முதன்மை தகவல் ஆணையர் வஜகத் ஹபிபுல்லா உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், மசோதாவில் இலங்கை தமிழர்களும், இஸ்லாமியர்களும் சேர்க்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.